Writing

Here, I would like to present my writing experiments:

என் எழுத்து வடிவ  முயற்ச்சிகளை இங்கே தொகுத்து வழங்கி இருக்கிறேன்:

29-Mar-2020:

வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது ...கூடாது . ஒரு மாத அரிசி பருப்பு வகையறாக்களை வாங்கி வெச்சாச்சு - டப்பா நிறைய பிள்ளைங்களுக்கு பிஸ்கட்டு இருக்கு - நிறைய நொறுக்கு தீனி இருக்கு - இன்டர்நெட் இருக்கு வெளிநாட்டு உறவினர்களுடன் பேசலாம் - கேபிள் டீ வீல நல்ல நல்ல படமா போடறான்  - 21 நாள் சமாளிக்கலாம் .

ஒரு படம் முடிஞ்சு அடுத்த படத்துக்கு முன்னாடி கொஞ்சம் காத்து வாங்கலாம்னு பால்கனியில் வந்து நின்னா ஜில்லுன்னு காத்து - இன்னும் மெட்றாஸ்ல இந்த  வருஷம் என்னவோ வெக்கை அவ்வளவு வரல - நினைச்சுண்டே எதிர பார்த்தா வரிசையா மூடி இருந்த கடைகள் 

அயர்ன் பண்ற அம்மாவைக் காணோம் - தினமும் துணி தேய்த்து சம்பாதிக்கறவங்களாச்சே என்ன பண்ணுவாங்களோ 

டைலர் கடை திறந்து நாலு நாளாச்சு

ஒரே ஒரு ஆட்டோக்காரர் பல்லு குத்திண்டு இருக்கார் 

தினசரி பூ வாங்குபவரும் சுவாமிக்கு பூவில்லாமல் பூஜைகள் நடப்பதால் பூக்காரி முகமும் பூவைப் போலவே வாடி இருந்தது 

யார்தான் காப்பாத்தப் போறாங்களோன்னு நினச்சு வானத்தை பார்த்து கும்பிடு போட்டுட்டு குனிஞ்சா நம்ப பிளாட்டை காக்கற முனுசாமி கோடம்பாக்கத்துலேர்ந்து சைக்கிளை மிதிச்சுண்டு நேரத்துக்கு டியூட்டிக்கு வந்துட்டார் 

கீழே ஓடிப்போய் ஒரு டம்ப்ளர் காபியையும் ஒரு பொட்டலம் மிக்சரையும் கொடுத்து வீட்டுக்கு வந்தவுடன் பூஜைக்கப்புறம் நெய்வேத்தியம் பண்ணின ஒரு திருப்தி மனதில் பரவியது  

16-Nov-2015:

ஒரு காலத்தில்
மனிதன், விலங்குகளை வேட்டையாட
விலங்குகள், தாம் பிழைக்க, மனிதனைத் துரத்த
ஒவ்வொருவரும் மற்றவரிடமிருந்து தப்ப முயல
அனைவரும் ஓட ,
எல்லோருடனும் நிம்மதியும் ஓடத் துவங்கியது.

விலங்குகளை விரட்டிய மனிதனுக்கு மண்ணாசை வாட்ட,
விலங்குகள் வாழ்ந்த காட்டுக்கும்  சொந்தம் கொண்டாடலானான்

வனங்கள் அழிந்து வீடுகள் முளைக்க
மரங்களின் தாகம் தீர்த்த நீர் நிலைகளும் தேவையற்றுப் போக
ஆற்றுப் படுகைகளிலும் மனிதக் காடுகள் முளைக்கலாயின

தான் வளர்த்த பிள்ளைகளான மரங்களைத் தேடி
மாரி அவ்வப் பொழுது ஓடி வர
காணாமல் போன, பொழிந்து வந்த பாதைகளைத்  தேடி அங்குமிங்கும்  அலைய

ஆங்காங்கே நட்டு வைத்த மரங்கள் மறைந்து போய்
கான்க்ரீட் காடுகளை உற்றுப் பார்த்து உச்சி முகர
வழி தெரியாமல் ஓடும் என்னைப் பார்த்து

வெள்ளமே ஏன் வந்தாய் என்று
அதட்டுகிறார்கள் , புலம்புகிறார்கள்.

- நனைந்த தமிழகத்தின் நிலை நினைத்து
ஒரு குளிர்ந்த காலையில்
பல்லாயிரக் கணக்கான மைல்களுக்கப்பாலிருந்து
மறுகும் ஒரு சென்னை வாசி

Posted in my Tamil Blog: http://chinthikkiren.blogspot.com/


14-Nov-2015:

வானம் கருத்துண்டே வருது -
ஓடிப்போய் வெளியிலுள்ள கொடியிலிருந்து துணிகளை எடுத்தேன்
நல்ல வேளை வண்டில போய் ஸ்கூல்லேந்து குழந்தையை கூட்டிண்டு வந்தாச்சு
காலேஜு பஸ்ஸும் இப்பத்தான் வந்தது, பொண்ணும் வீடு திரும்பியாச்சு
சனியன் புடிச்ச மானம் உறுமுதே தவிர மழை வர மாட்டேங்குது
ஒரு கொட்டு கொட்டினா என்ன , புழுக்கமும் குறையும் கிணத்துல தண்ணியும் ஏறும்
இன்னும் ரெண்டு மணி நேரத்துலே ப்ளைட்ட புடிக்கணுமே

பாட்டிய ஆஸ்பத்ரிக்குக் கூட்டிண்டு போகணுமே

விடிஞ்சா கல்யாண மாச்சே

அவசர மீட்டிங்குக்கு பைக்குல போகணுமே

இன்னிக்கு மட்டும் மழை வராம இருந்தா நல்லா இருக்குமே
கருப்பது மானமா , மனமா ?

வாசனை

"அப்பா, ஐஸ் வாங்கித் தரயா "
"ஸ்கூலுக்கு லேட்டாச்சுப்பா. சாயந்தரம் பாக்கலாம்"
இந்த மாதிரி ஒரு உரையாடல் விகாசுக்கும் அவன் அப்பாவுக்கும் அடிக்கடி நடக்கும். என்ன வித்தியாசம்னா சாயந்தரம் இவனே மறந்திருந்தால் கூட அப்பா ஞாபகப் படுத்தி அந்தக் குச்சி ஐஸை வாங்கிக் கொடுத்துடுவார். அவ்வளவு பாசமா, நேர்மையான்னெல்லாம் அலசத் தெரியாத வயசு.
ரொம்பச் சின்ன வயசு நடவடிக்கைகள் அவ்வளவாக  ஞாபகம் இல்லாவிட்டாலும், அப்பா பின்னால் உட்கார்ந்து சைக்கிளில் போகும் காட்சி மட்டும் மறக்கவே இல்லை. அப்பாவின் இடுப்பை இறுக்கக் கட்டிக் கொண்டு, கண்ணை லேசாக மூடிக் கொண்டு, தூள் பக்கோடா வாசனையை வைத்தே ஐயர் பலகாரக் கடையை காண அரைக் கண்ணை மட்டும் திறந்து மூடுனதெல்லாம் இன்றும் அடிக்கடி கண்ணில் வந்து போகும் காட்சி.
ஆனால், காலையில் சைக்கிளில் பின்னாடி உட்கார்ந்து அப்பாவைக் கட்டிப் பிடிக்கும் போது அவரிடமிருந்து வரும் அந்த விபூதி வாசனை மட்டும் மறக்கவே முடியாது. யார் பழனி போனாலும் வீட்டுக்கு சித்தனாதன் விபூதி ஒரு பாக்கெட் வந்து விடும் - காலியானதாக சரித்திரமே கிடையாது. உள்ளூரில் வாங்கின விபூதியைக் கையால் கூட தொட மாட்டார். "மண்ணு மாதிரி, வாசனையே இல்லை" என்று பல விமரிசங்கள் வந்து விழும்.
அவர் வேலை செய்யும் கடை ஸ்கூலுக்குப் பக்கத்தில தான் இருக்கரதால, என்ன வேலை இருந்தாலும், மதியம் சாப்பாட்டு நேரத்தில அப்பாதான் சோத்துக் கூடையுடன் அருவார். அப்ப விபூதி வாசனை போய் பல விதமான மளிகை ஐட்டங்களோட வாசனை தெரியும். சாயந்திரம் வேலையில் இருந்து திரும்பியவுடன் குளித்து விட்டு அப்பா போட்டுக் கொள்ளும் குட்டிக்குரா பௌடர் வாசனை வீடே மணக்கும. அப்பா கிட்டேயே கேட்ருக்கான் "எதுக்குப்பா, வித விதமா பவுடர் போட்ரேன்னு".
"நான் என்ன கம்பேனிலயடா வேல செய்யரேன். இருக்கறது மளிகைக் கடையில். படுக்கைல படுத்தா மல்லி வாசம் வந்தா பரவாயில்ல, மிளகா காரக்கூடாது".
இதெல்லாம் என்றோ நடந்தாலும் இன்று அந்த நினைப்பே நறுமணத்தைக் கூட்டுகிறது. அவனுக்கு இப்பவும் அந்த கிராம வீதியில் போவது போல் தான் இருக்கிறது. அவ்வளவு பசுமையான நாட்கள்.
"என்ன விகாஸ். ரொம்ப நேரமா கேட்ட கேள்விக்கு பதிலே காணோம்" - தன் வீ பீ எனப்படும் வைஸ் ப்ரெசிடென்ட் ராமனாதன்  குரல் கேட்டு அதிர்ந்து நினைவலைகளில் இருந்து வெளியே வர முயற்ச்சித்தான். தான் எங்கு இருக்கிறோம் என்று உணர ஆரம்பித்து, கண்ணாடி ஜன்னல் வழியே தெரிந்த அந்த உலகப் ப்ரசித்தி பெற்ற பாலத்தை வைத்துத்தான் தான் இருப்பது பள்ளத்தூர் அல்ல, ஆஸ்த்ரேலியா என்பதை உணர்ந்தான்.
"என்ன உடம்பு ஏதாவது சரியில்லையா. நாளைக்கு கஸ்டமரோட கடைசி மீட்டிங். இதுல நம்ப கம்பெனிய எப்படி ப்ரொஜெக்ட் பண்றோமோ அதப் பொறுத்துத் தான் இருக்கு, இந்தப் ப்ராஜக்ட் நமக்குக் கிடைக்கறதும், கிடக்காததும்".
"சாரி சார். கொஞ்சம் லேசா தலவலி".
"ஓ கே. ஒண்ணு பண்ணு. போய் லன்ச் முடிச்சுட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்க. ஈவினிங் ரிலாக்ஸ் பண்ணிட்டு நாளைக்கு ஞாயித்துக் கிழமை தானே. ஒரு ஒன்பது மணிக்குப் ப்ரேக்ஃபாஸ்ட்க்கு மீட் பண்ணி அப்படியே ரிவ்யூ பண்ணலாம்" என்றார் பாஸ்.
அப்பாடா என்று விடுவிச்சுண்டு மதியம் வந்தவன் மாலை ஏழு மணிக்குத்தான் டைமண்ட் ஹார்பர் பக்கம் வந்து அந்தக் குளிர்ந்த காற்றைக் கொஞ்சம் ஸ்வாசித்தான். நேற்றுத் தான், இங்கு உள்ள உலகப் ப்ரசித்தி பெற்ற அந்த தியேட்டரில் படம் பார்ப்பதற்க்கு பதிமூணு டாலர் குடுத்து டிக்கட் வாங்கி இருந்தான். ஞாயித்துக் கிழமை படம் பாத்துட்டு , கொஞ்சம் ஷாப்பிங் பண்ணிட்டு சாயந்திரம் பகழ் பெற்ற 'போண்டாய்' பீச்சையும் ஒரு நடை பாத்துட்டா, திங்கள் கடைசி மீட்டிங்- அப்புறம் ஏர கட்ட வேண்டியதுதான் என்று நினைத்திருந்தான்.
ஊரில் இருந்து வந்த அந்த போன் கால் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டது- 'அப்பா உடம்பு கொஞ்சம் கொஞ்சமா இறங்கிண்டே வருது. நீ ஒரு நடை வந்து போறது நல்லது" ன்னு சித்தப்பா பேசினார்.
'என்னாச்சு சித்தப்பா"?
"ஒண்ணுமில்லப்பா. வயசுதான் காரணம். கொஞ்சம் மூச்சுத் திணரல் இருக்கு. இப்பத்து டாக்டர்களெல்லாம் ஆக்ஸிஜன் வெக்கலாங்கரா. எனக்கென்னவோ இது ஸ்வாசம் வாங்கரதோன்னு தோணுது. அப்படி இருந்தா ரெண்டு பகல் தாங்காதுன்னு சொல்லிக் கேள்விப் பட்டிருக்கேன். அதான் உங்கிட்ட சொல்லிடலாமுன்னு- நீ மூத்த புள்ளயாச்சேப்பா. பக்கத்துல இருந்தா அப்பாக்கு எவ்வளவு ஆறுதலா இருக்கும்".
எவ்வளவு நாசூக்கா சொல்ல முடியுமோ அப்படிச் சொல்லி விட்டார், "எதாவது நடந்தால் நீ தேவை" என்று.
"ஒரு முக்கியமான மீட்டிங்குக்காக வந்திருக்கேன். திங்கள் தான் அந்த மீட்டிங் - இப்ப எப்படி" என்று தடுமாறினான்.
கொஞ்சம் விவரம் தெரிந்த சித்தப்பா "யோசனை பண்ணிக்கோப்பா" என்று சொல்லி போனை வைத்து விட்டார்.
சினிமா டிக்கெட்டைக் கிழித்துப் போட்டு விட்டு அங்கு சுழல் சுழலாக ஒடும் அந்த வினோதமான தண்ணி ஃபௌன்டனைப் பார்த்து, நம்ப வாழ்க்கையும் இப்படித்தானோன்னு வியந்தான். பெரிய விஷயங்கள் கை கூடி வரும் போதெல்லாம் அதுக்கு ஏதாவது ஒரு முட்டுக் கட்டை வந்து விடும். ப்ரம்மப் ப்ரயத்னம் பண்ணி ஏதாவது சமாளிச்சு வெளியே வருவான். ஆனால் இப்பல்லாம் அதுவே கொஞ்சம் அலுப்பாக மாறத் தொடங்கி இருக்கு. மனுஷனுக்கு வாழ்க்கைல சோதனை வரலாம், ஆனால் சோதனையே வாழ்க்கையாயிடுத்து.
சீ. . .  இதென்ன சினிமா வசனம் மாதிரின்னு தலையை உலுக்கிண்டு எழுந்து நடக்க ஆரம்பித்தான். தூரத்துல போர படகுல சுற்றுலாக் கூட்டம் ஆரவாரித்துக் கொண்டிருந்தது. சனிக்கிழமைக் கூட்டம் எப்பொழுதும் காலியாக ஒடும் மோனோ ரயிலையும் விட்டு வைக்கவில்லை. எது என்னவானாலும், எத்தனை கூட்டம் வந்தாலும், அந்த மோனோ ரயில், ஒரே தண்டவாளத்தில் அந்தரத்தில் ஓடினாலும், தன் கடமையை விடாமல் எல்லோரையும் சுமந்து போய் மகிழ்ச்சி கொடுத்துக் கொண்டிருந்தது. சட்டென்று எதோ தோன்றியவனாக எழுந்து தன் பாஸ் ஹோட்டல் ரூமுக்குப் போக ஆரம்பித்தான்.
"என்ன சொல்ரே விகாஸ் , உனக்கு ஏதாவது பைத்தியம் புடுச்சுடுத்தா" என்ற வீ பியை மௌனமாகப் பார்த்தான்.
"ஆறு மாசமா இந்தப் ப்ராஜக்டு கிடக்கணுங்கரத்துக்காக  போராடிண்டிருக்கோம். இங்க வந்தே மூணு வாரம் ஆச்சு.  இப்ப எல்லாம் முடிஞ்சு நம்ப கைக்கு வரும் போது இண்டியா போணுங்கரயே. உன்னத்தானே இதுல ரொம்ப பெரிய ஸ்பெஷலிட்டா க்ளையண்ட் கிட்ட சொல்லிருக்கோம். இப்ப எப்படி " என்று பாஸ் கண் சிவந்து கேட்டார். சிவப்பு கோபத்தினாலா அல்லது ஆஸ்த்ரேலிய முன்னிரவின் விசேஷத்தாலா என்று அவனுக்கு அலச நேரமில்லை.
"இல்ல சார். அப்பாவுக்கு ரொம்ப சீரியஸ். நான் இருக்கணும்னு ஃபீல் பண்றா. க்ளையண்ட்டுக்கு நான் சொல்ல வேண்டியதெல்லாம் நேத்திக்கு வைண்ட் அப் மீட்டிங்லயே சொல்லிட்டேன். திங்கள் கிழமை கடைசி ரௌண்ட நீங்க ஈசியாப் பாத்துக்கலாம். அதுக்குத்தான் காத்தால மூணு மணி ஃப்ளைட்ல டிக்கட் போடச் சொல்லிட்டேன். அதுவே நான் எங்க கிராமத்துக்குப் போறதுக்கு செவ்வாய்க் கிழமை ஆயிடும்"
வீ பீ மேலும் நரம்பு புடைக்க கத்தினார் " இதனால் என்ன ஆகும் தெரியுமா? இந்தப் ப்ராஜக்ட் வரலேன்னா இத்தன நாள் உழப்பும் போயிடும். இதுக்காக நம்ப செலெக்ட் பண்ணி வெச்சுருக்கிற டீமை வீட்டுக்கு அனுப்பணும். சிசுவேஷன் ஹாண்டில் பண்ணத் தெரியல்லேன்னு எம். டி கத்துவார். என் ப்ரொமோஷனை விடு, உனக்கு ஏற்பாடு பண்ணி வெச்சுருந்த ப்ராஜக்ட் டைரக்டர் போஸ்ட் போச்சு. இந்தச் சந்தர்ப்பத்தை விட்டா உன்னால அந்த சீட்ட இனிமே பிடிக்க முடியாது"
"நான் என்ன சார் பண்ரது. எல்லாம் புரியறது. ஆனால நான் மூத்த பையன் என் கடமைய செய்ய வேண்டாமா"
":என்னயா கடமை. நானும் கும்மோணத்துக்காரந்தான்.எனக்கும் இதெல்லாம் தெரியும். நீ இல்லன்னா உன் தம்பி பாத்துப்பான். அஞ்சு வருஷம் முன்னாடி நான் ஜப்பான்ல மாட்டிண்டப்ப என் தம்பி தான் எங்கம்மாக்கு எல்லாம் செஞ்சான். சொல்லப் போனா என் அப்பா நான் பொறக்கரதுக்கு முன்னாடியே போயிட்டதால,என்னப் பெத்தவாளுக்கு நான் இது முட்டும் எந்தக் காரியமும் செஞ்சதில்லை. என்ன பண்ரது, நம்ப வேலை அப்படி".
கொஞ்சம் மூச்சு வாங்கித் தொடர்ந்தார் "ஆனா இந்த ஆப்பர்சூனிடிய விட்டா உன்னால அந்த பீ.டீ நாக்காலிய மோந்து கூடப் பாக்க முடியாது. போய் வேலயப் பார். திங்கக்கிழம சாயந்திரம் நம்ப ப்ரெசென்டேஷன் முடியற வரைக்கும் கூப்பிட வேண்டான்னு ஊர்ல சொல்லிடு " என்று சொல்லி மறுபடியும் கோப்பைய நிரப்புவதுக்கு அவர் நகந்த போது தான் அவன் வெடித்தான்.
"என்ன சார் பேசுரீங்க. என்னப் பெத்தவர் மூச்சு வாங்கிண்டு நாடிய எண்ணிண்டிருக்கார்,  நீங்க இப்படிச் சொல்றிங்க. இந்தப் ப்ரோஜக்ட் வருமா போகுமான்னு தெரியாது. ஆனா எங்கப்பா கண்டிப்பா போயிடுவார். இனிமே கேட்டாக் கூட வரமாட்டார்.
உங்களுக்கு பெத்தவாளுக்கு அந்திமக் காரியங்கள் செஞ்சு பழக்கம் கிடையாது. எங்கம்மாக்கு நான் பண்ர போது ஒவ்வொரு விஷயத்தையும் எங்கப்பா வெளக்கிருக்கார். அந்த ஆத்மா, புள்ள மடில உசிர விடரதுக்கு எவ்வளவு பறக்கும். அந்தக் கடசி வாய்ப் பால புள்ள விடரதுக்குதானே ஏங்கிட்டு இருக்கும்.
எவ்வளவு எடத்துக்கு என்ன கையப் புடிச்சுணு கூட்டிண்டு போயிருக்கார். அவருக்கு நான் தோள் கொடுக்க வேண்டாமா?
நேரம் தவறாம சாப்பாடு கொண்டு வந்தவருக்கு ஒரு வாய் அரிசி கூட போடலேன்னா, நான் என்ன புள்ள?
கேட்டப்பொல்லாம் ஐஸ்க்ரீமும், பக்கோடவும் வாங்கிக் குடுத்தவர்க்கு நான் அட்லீஸ்ட் உப்பில்லாத பண்டமாவது போட வேண்டாமா?
நான் இல்லாம அந்த ஜீவன் நகராது. என்னதான் பேரப் பசங்க நெய்ப் பந்தம் பிடித்து வழிக்கு வெளிச்சம் காட்டினாலும், போர பாதைல வரும் பல இடறுகளுக்கு நான் புள்ளயா கூட இருந்து அந்த ஜீவனைக் கரையேத்த வேணாமா?
இதெல்லாம் செய்யாம அப்புறம் எவ்வளவு சம்பாதிச்சுத்தான் என்ன ஆகப் போரது சார்" மிரண்ட சாதுவை பிரமிப்பாகப் பார்த்தார் பாஸ்.
" என்ன சொன்னீங்க. அந்த பீ டி நாக்காலி மோந்து கூடப் பாக்க முடியாதா. போகட்டும் சார்.
ஆனா வாசனையப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும். நான் ஊருக்குப் போறதுக்குள்ள எங்கப்பா போயிட்டா அப்புறம் அந்த விபூதி வாசனையும் , குட்டிகூரா போட்ட அப்பாவையும் நான் ஜென்மத்துக்கும் உணர முடியுமா சார். நான் கொஞ்ச லேட்டா போனாக்கூட ஐஸ் பொட்டில போட்டு வெச்சுருப்பா. என்னப் பொத்திப் பொத்தி வளர்த்த அந்த உடம்பு, யூடிகோலோன் போட்டு நாறிண்டு கிடக்கணுமா சார்."

அப்படிப்பட்ட காசு எனக்குத் தேவை இல்லை சார். அதுக்காக நான் கம்பெனிய அம்போன்னு விட்டுட்டுப் போல. என் பார்ட் எல்லாம் ஓவர். என்னுடைய கடைமயா இந்தப் ப்ராஜக்ட்டுக்கு என்ன தேவையோ எல்லாம் செஞ்சுட்டேன். இப்ப எங்கப்பாவுக்கு  என் ட்யூட்டிய செய்யணும் ஸார். எனக்கென்னவோ வெள்ளக்காரன் இன்னும் நன்னா புரிஞ்சுப்பான்னு தோண்றது" என்று சொல்லியபடியே போனை எடுத்து "சித்தப்பா, ஊருக்கு செவ்வாக் கிழமை எப்படியும் வந்துடுவேன்..." என்று பேசிக் கொண்டே நகர்ந்தவனின் நடையிலும் பேச்சிலும் தெளிவு தெரிந்தது. தலைக்கு மேல் கட கட வென்று அவனைக் கடந்து போன மோனோ போனதை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே நடந்தான். 
Published in www.sirukathaigal.com on 28-Aug-2014

வந்துடுச்சா?

"யாருப்பா இங்க தோணி"
குரல் வந்த திசையை நோக்கி ஒடி "நான் தான் சார்" என்று நின்றவனை இன்ஸ்பெக்டர் ஜான் ஏற இறங்கப் பார்த்தார்.
பழைய சாயம் போன எங்கிருந்தோ கண்டெடுத்த பாண்ட்- முட்டியில் கொஞ்சம் கிழிசல். சோப்பைப் பாத்து ரொம்ப நாளாகிப் போன ஒர் டீ ஷர்ட். வாராத தலை, ஒரு வார தாடி.
கிட்ட வந்து நின்னவனை , முகத்தை சுளித்து "தள்ளி நில்லுயா" என்ற ஜான், "முழுப் பேர் என்ன அந்தோணியா " என்றார்.
"இல்ல சார் தோணியப்பன்" என்ற பதிலில் கொஞ்சம் ஏமாற்றமாகிப் போய் "என்னன.. பேருயா" என்றார், மணிவண்ணன் குரலில்.
"தெரில. அப்பனும் ஆத்தாளும் வச்சது. ஏன்னு கேக்கரதுக்கு முன்னமே போய்ட்டாங்க" என்று வெள்ளந்தியாக பதில் சொன்னவனுக்கு தான் சீர்காழிக்குப் பக்கத்து கிராமத்துல பொறந்தது தெரிய நியாயமில்லை. அவன் பேர் Dhoni  இல்லை Thoni
நேத்தி ராத்திரி பதினோரு மணிக்கு போலிஸ் ஸ்டேஷனுக்கு தன் பெண் கோகிலாவோடு வந்தவன்தான். காலைல ஒரு டீயும் பன்னும் ஏட்டையா குடுத்ததை தின்னுண்டே "சார் எப்ப சார் வூட்டுக்குப் போலாம்" என்றவனை "இருய்யா. இன்ஸ்பெக்டர் வரட்டும் என்று சொன்னதைக் கேட்டு இன்னமும் அங்கேயே இருக்கிறான். அவ்வப்போது பக்கத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் கோகிலாவைத் தட்டிண்டே.
கோகிலாவுக்கு வயதுதான் பன்னெண்டு ஆச்சே தவிர இன்னும் விவரம் பத்தாது. தோணிக்கு சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யும் வேலை. காலைல போனால் மதியம் ரெண்டோ, மூணோ சொல்ல முடியாது. தன் குடிசைக்குப் பக்கத்துல கீரை விக்கும் கிழவி கிட்ட தான் விட்டுட்டு போவான். நேத்துக்கும் அப்படிப் போனவன் தான் நாலு மணிக்கு வந்தப்போ கிழவி சொன்னாள் "உன்னத் தேடிண்டு தான் பஜார் பக்கம் போச்சு" என்று.
அலைந்து திரிந்து பார்த்ததில் ஊருக்கு ஒதுக்குப் புறமான அம்மன் கோயில் பக்கமுள்ள அரச மரத்துக்குக் கீழே தூங்கிக் கொண்டிருந்தாள். கிட்டப் போய்ப் பாத்தாத் தான் தெரிஞ்சுது "மயக்கமுன்னு". அப்படியே தூக்கிண்டு போய் பக்கதுல இருக்கற தர்மாஸ்பத்ரில பாத்தா, டாக்டர் 'ஏய்யா இப்படி வெவரம் தெரியாத வயசுப் பொண்ணெல்லாம் தனியா உட்டுட்டு போறீங்க"ன்னு சத்தம் போட்டார்.
"நான் என்னய்யா பண்றது. இறங்கி காவா கழுவினாத்தான் அன்னிக்கு சோறு" என்றவன், "என் பொண்ணுக்கு என்னய்யா" என்றான்.
அங்கு வந்த நர்ஸ், அவனுக்கு பதில் சொல்லாம "ஆமா, இவன் மட்டும் ரொம்ப வெவரம் தான்" என்றவள். "வெளையாடிண்டு இருந்த பொண்ண யாரோ அப்பா கூப்ட்ரார்ன்னு மோட்டார் சைக்கிள்ள கூட்டிண்டு போயிருக்கான் ஒரு பையன். இது போலிஸ் கேஸு, டேசனுக்கு போ, இன்ஸ்பெக்டர் சொல்வார்"ன்னு அனுப்பிச்சுட்டாங்க.
இன்ஸ்பெக்டர் ஜான், ஏட்டையாவிடம் விஜாரித்த போது தான் தெரிஞ்சது "லோகல் பையன் ஒருத்தன் தான் கூட்டிண்டு போயி விபரீதம் பண்ணியிருக்கான் ஸார். வண்டிய வெச்சு ஆள கண்டு பிடிச்சாச்சு"
"அப்புறம் ஏய்யா பையனத் தூக்கிண்டு வரல. அதுக்கும் நா வரணுமா. லாக்கப்புல வெச்சு லாடம் கட்டினா கக்கறான்" என்றார்.
அதற்க்கபுறம் ஏட்டு, ஜான் காதைக் கடித்ததில் பாதி தான் தோணிக்குக் கேட்டது "....டாக்டர் பேசினார்...ரொம்ப மோசம்....பெரிய புள்ளி.. போன் வந்தது. உங்க பொண்டாட்டி இருக்கிற திண்டிவனத்துக்கு நீங்க கேட்ட ட்ரான்ஸ்பர் ....." ஆனா தோணிக்கு ஒண்ணும் புரியல்ல.
இன்ஸ்பெக்டர் அவனிடம் வந்து "டேய், நான் டாக்டர் கிட்ட பேசிட்டேன். ஒரு ஊசி போடுவாங்க. எல்லாம் சரியாப் போய்டும். போ" என்றபடி அவனிடம் ஒரு அம்பது ரூபாயக் குடுத்தார், ரெண்டு பேருக்கும் டிபனுக்காக.
பக்கத்தில் நின்ன கோகிலாவிடம், அப்பத் தான் கொடியேத்தி விட்டு வந்த இன்ஸ்பெக்டர் கோகிலாவிடம் கொடுத்தார்.
கையில வாங்கிண்டு "இது ஏது" ன்னா.
"முட்டாய். இன்னிக்கு சுதந்திர தினமோன்னோ , சாப்பிடு" என்றார்.

"நமக்கு சுதந்தரம் வந்துடுச்சாப்பா" என்றவளிடம் என்ன சொல்வதென்று தெரியாது நின்ற தோணியிடம் ஏட்டு "டேய், சாயந்திரம் வீட்டுப் பக்கம் வா. கொல்லையில அடச்சுண்டு இருக்கு. இறங்கித்தான் பாக்கணும்" என்றார்.
Published in www.sirukathaigal.com on 18-Aug-2014

நம்ம பொண்ணு

குமாரவேல் ஆபிஸுலேந்து வந்த உடனேயே கவனித்தார், தன் மனைவி பங்கஜத்தின் முகத்தில் ஓடிய புதிய கவலை ரேகைகளை. வரும் சொல்ப சம்பளத்தில், எப்படியோ குடும்பம் ஓடிக் கொண்டிருந்தது. படிக்காதவளாக இருந்தாலும் சாமர்த்தியமாக சமாளிப்பதில் பங்கஜத்திற்க்கு பெரும் பங்குண்டு. விவரம் தெரிந்து, அவரின் தனியார் கம்பெனி வேலை பளு புரிந்து, இதுவரை அவரிடம் எந்தப் பிரச்சினையையும் அவள் எடுத்துக் கொண்டு போனதே இல்லை. எப்படியோ சமாளித்து விடுவாள். அப்படிப்படவளின் முகத்தில் தெரிந்த கவலை தான் அவரை கொஞ்சம் சிந்திக்க வைத்தது. ஆபீஸ் அலுப்பும், முதுகு வலியும் சேர்ந்து அவரை இது பற்றி எதுவும் மேலும் கேட்கத் தூண்டாமல் தடுத்தது.
அவருக்கிருப்பதோ ஒரு பெண்ணும் , பிள்ளையும் தான். பெரிய பெண் அனிதா, இஞ்சினீயரிங் காலேஜில் மூன்றாம் வருஷம். நன்றாகப் படிக்கக் கூடிய சுட்டி. சில சமயங்களில் இளம் மனம் அலை பாய அவ்வப்பொழுது மார்க்குகளைக் கோட்டை விடுவாள். குமாரவேலின் துரதிர்ஷ்டம், தேவையான நேரத்தில் அந்த அலை, ஸ்கூல் கடைசி வருஷத்தில் மீண்டும் சுனாமியாய் பாய மார்க்கு குறைய, கஷ்டப் பட்டு, யார் யார் காலையோ பிடித்து இஞ்சினீயரிங் சேர்த்து விட்டார். அதற்க்கப்புறம் ஒன்றும் பெரிய மாற்றமில்லை, அதே விளையாட்டுத்தனம், டீ வீ, சினிமா இவைகள்தான். எது இருந்தாலும் தன் பெண் மீது அபார நம்பிக்கை அப்பாவுக்கு, எப்படியும் தனக்குப் பேர் வாங்கித் தருவாளென்று.
ஆனால் பங்கஜத்துக்கோ பக்கத்து வீட்டு உமாவைப் போல் இவளும் அமைதியான பெண்ணாக நடந்து கொள்ள வேண்டுமென்பது ஆசை. உமா எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருப்பாள். அப்பா கூப்பிட்டால் கையில் இருப்பதை போட்டு விட்டு ஓடுவாள். காலேஜ் விட்டு வீட்டுக்கு வந்தால் எங்கேயும் போக மாட்டாள், போனாலும் ஏழு மணி அடிப்பதற்க்குள் வந்து விடுவாள். இப்படி அம்மா சொன்னதாலோ என்னவோ, உமாவை சாமர்த்தியமாகத் தவிர்க்க ஆரம்பிதிருக்கிறாள், அனிதா. இந்தக் காலப் பசங்களுக்குச் சொல்லியா தரணும் - நைஸாக வாழைப் பழத்தில் ஊசி ஏத்த!.
சின்னவன் இந்தக் காலத்து எட்டாம் வகுப்பு மாணவன். சதா சர்வ காலமும் கையில் கிரிக்கெட் பேட்டுடன், சைக்கிளில் அந்த ஏரியாவையே வட்டமடித்து கொண்டிருப்பான். அரும்பி வரும் மீசை பற்றி ஏகப் பெருமை.
அன்று சனிக்கிழமை- சாதாரண மக்களின் சந்தோச நாள். இரவு தூங்கப் போகும் முன் சற்று டல்லாக இருந்த மனைவியிடம் கேட்டார் "ஏன் ஒரு மாதிரி இருக்கே? வழக்கமான கல கலப்பு தெரியல்லயே?".
மறைக்க முயன்று உடனே தோற்றுப் போய் மடை திறந்தாள்.
"நம்ப அனிதாவை நினைச்சால் ரொம்ப கவலையாயிருக்கு"
"ஏன் என்னாச்சு அவளுக்கு"
"கொஞ்ச நாளா அவ போக்கே சரியில்லை"
"சஸ்பென்ஸ் எல்லாம் போடாம விவரத்தச் சொல்லு"
"இப்பல்லாம் காலேஜுலேந்து வந்தா முன்ன மாதிரி பேசரதுல்லே. கேட்ட கேள்விக்கு பதில். கதவக் கதவ சாத்துண்டுடறா.
போறாக்குறைக்கு இப்ப ஏதோ இங்க்லீஷ் நாவல் வேற படிக்க ஆரம்பிச்சிருக்கா போல. காலேஜ் லைப்ரரி நாவல் எப்போதும் கையில. முந்தா நேத்திக்கு அப்படித்தான் விடாப்பிடியா ஒரு கதையை எனக்குச் சொல்லி அதோட முடிவை கண்டு பிடிங்கறா. கேட்டா இந்த கடைசீல சஸ்பென்ஸ் வர மாதிரி கதைதான் அவளுக்கு ரொம்ப இஷ்டமாம். எனக்கென்னவோ ரொம்ப பயமாயிருக்கு".
"இதிலென்ன பயம். இந்தக் காலத்துப் புள்ளைங்க பண்றது தானே"
"போன வாரம் ராத்திரி ரெண்டு மணி இருக்கும். இவ ரூம்ல லைட் எரியறதே, படிச்சின்றுக்காளோன்னு போய் பாத்தா, விட்டத்த பாத்துண்டுருக்கா. என்னடின்னு கேட்டா சிரிச்சுட்டு லைட்ட அணச்சுட்டா".
"எப்பப் பாத்தாலும் அந்த செல் போனை நோண்டிண்டே இருக்கா. மெஸேஜ் வந்தூண்டே இருக்கு, போயிண்டே இருக்கு. என்னடி பிஸினஸ் பண்ற உங்க மாமாகூட இவ்வளவு செல் பேசறதில்லன்னு  சொன்னா, ஓல்ட் ஸ்கூல்ன்னு பழிச்சுட்டு போறா. கொஞ்சம் பேசிக் கண்டிக்கக் கூடாதா "
"இந்தக் காலத்துப் பசங்கள கொஞ்சம் விட்டுத்தான் புடிக்கணும். நம்ப காலமில்லை இது தேங்கா ஒடச்ச மாதிரி உடனே கேக்கரதுக்கு".
"முன்னெல்லாம் பக்கத்தாத்து பொண்ணு உமாவோடதான் போவா வருவா, அப்பெல்லாம் எனக்கு நிம்மதியா இருந்தது. இப்ப தனித் தனி. கேட்டா அவ வழி ஒத்து வரலேங்கறா"
"எதுக்கும் அந்த உமா கிட்டா சொல்லி வெக்கட்டுமா, இவ மேல ஒரு கண் வெச்சுக்கச் சொல்லி?"
"வேண்டாம், வேண்டாம். அவளுக்கு தெரிஞ்சா பொங்கிடுவா. ஏம்மா, நம்ப பொண்ண நம்பளே நம்பாட்டா எப்பிடி. இந்த மாதிரி ஸ்பை வேலையெல்லாம் தேவை இல்லை. மனச போட்டு அலட்டிக்காம பேசாம படு"
"என்னவோ கீரத் தண்டு மாதிரி வளர்ந்த பொண்ண வெச்சுண்டு எப்படித்தான் நிம்மதியா தூங்குறீங்களோ. இதுல எனக்கு வேற அட்வைஸ்" என்று ஒருக்களித்துக் கொண்டாள்.
அவள் வாயை அடச்சாலும், அவருக்குள்ளே ஏதோ ஒண்ணு நம நமன்னுது. கட்டுப்படுத்திண்டு தூங்க முயற்ச்சித்தார்.
இது முடிஞ்சு ரெண்டு நாள் அவரும் தினமும் அனிதாவுடன் பேச்சுக் குடுத்துப் பார்த்தார். சாதாரணமாகத் தான் பதில் சொன்னாள், ஆனால் அந்தப் புன்னகையில் ஒரு ஏளனம், நக்கல் தெரிந்தது.
அன்று அவர் ஆபிஸ் முடிஞ்சு லேட்டா 9 மணிக்கு வீடு திரும்பும் போது, தெரு முனையில் பார்த்தார், வீட்டு வாசலில் கொஞ்சம் ஒரு அஞ்சாறு பேர் கூடி  நிக்கறதை. துரிதமாக நடையக் கட்டி விட்டுக்கு வந்தால் பங்கஜம் சொன்னாள் " பக்கத்து வீட்டு உமாவைக் காணுமாம்"
"என்ன, எப்படி" என்று பதறிய போது, "ஏதோ லெட்டெர் எழுதி வெச்சுட்டு வேற போயிருக்காளாம். கேபிள் டீ வீ விஷயமா அடிக்கடி வரும் ஒரு பையனோட" என்றாள்.
"என்னது, அவ அப்பா, அம்மா, யாருக்குமே தெரியாதா" என்று அதிர்ச்சி மாறாமல் கேட்ட போது, உள்ளேருந்து வந்த அனிதா சொன்னாள் " ஏன் தெரியாம. இது ரொம்ப நாளா ஓடுது. நான் அந்த ஆன்டி கிட்ட போன மாசமே சொன்னேனே"
"என்ன தான் இருந்தாலும் உமா எனக்குப் பிடிச்ச ஆதர் மாதிரி, கடசி வரைக்கும் யாருமே யோசிச்சுக் கூட பாக்காத மாதிரி ஒரு ட்விஸ்ட் குடுத்துட்டா. நீ வேணா பாரேன், அவ பின்னாடி ஒரு பெரிய எழுத்தாளரா வரப் போறா" என்றாள்.

குமாரவேலின் பார்வையை தாங்க முடியாமல் பங்கஜம் சமையலறைக்கு நழுவினாள்.
Published in www.sirukathaigal.com on 25-Jul-2014

குடுக்கற தெய்வம்

ரயில் சென்னை சென்ட்ரலில் வந்து நின்றதும் , லதாவுக்கு தலை கால் புரியவில்லை. உடம்பே லேசாக நடுங்கியது. ஒரு வழியாக வந்து விட்டோம். யார் என்ன சொல்லியும் பொறுமை கை குடுத்தது. அதற்க்கு முன் அந்த ஈச்சனாரி தெய்வத்தையும் நினைத்தே ஆகவேண்டும். விடாப் பிடியாக  அந்தக் கோவிலைச் சுற்றியதோ என்னவோ இன்று சென்னைப் பட்டினம் வந்தாச்சு. ஸ்டேஷனுக்கு வந்துடரேன்னு சொன்ன இளங்கோவைத்தான் இன்னும் காணோம். சனிக்கிழமை கொஞ்சம் வேலை ஜாஸ்த்திதான் என்றாலும், கண்டிப்பாக கம்பெனி புல்லட்டில் வந்து விடுவதாகத் தான் சொன்னார். சென்னையில் அப்பொழுதுதான் மழை அடித்தது போலிருக்கு, காத்து வேற எக்கச்சக்கமாக இருந்தது. போன் பண்ணிப் பாக்கலாம் என்று  போனை எடுத்தவள் அப்படியே வைத்து விட்டாள் - "வேண்டாம் , வண்டி ஓட்டிக் கொண்டிருப்பார். என்னவானாலும் எடுக்க மாட்டார். ஹெல்மெட் போட்டுக் கொண்டு செல் போனைத் தொடவே மாட்டார். அவ்வளவு ஒழுக்கம்". இந்த பெர்ஃபெக்க்ஷன் தான் அவளை மூன்று வருடங்களுக்கு முன் அவனிடையே ஈர்த்து கட்டியும் போட்டது.
கோவை கணபதியில் , அவள் அப்பொழுது பீ.எஸ்.ஸி இரண்டாம் வருஷம். - மறுநாள் பரீட்சைக்காக அஸ்ட்ரானமி படித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு இந்த இயற்க்கையின் மேல் அவ்வளவு பிடித்தம். ஊர்ந்து படித்துக் கொண்டிருந்தவள் வாசல் மணி கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்தால் ஒல்லியாக, சிவந்த ஒரு பையன், மூன்று நாள் தாடி, ஆனால் நன்கு வெட்டப் பட்டது - இப்பத்தான் வெச்சிருக்கான் போலிருக்கு- கையில் ஹெல்மெட்டுடன் - "என் பேர் இளங்கோ. தாமோதரன் ஸார் வரச் சொல்லி இருந்தார். இருக்காரா?"
"அப்பா இன்னும் வரல்லை. ஏதோ திடீர் மீட்டிங்காம். போன் பண்ணினார். சனிக்கிழமை வர முடியுமான்னா கேட்டார்".
ஏமாற்றத்தை சாமர்த்திய்மாக மறைத்த படி "சரி" என்று சொல்லி நகர்ந்தவனை, ஏனோ வலுக் கட்டாயமாக நிறுத்தினாள். "தண்ணி சாப்டறேளா".
மரியாதையாக ஷூவைக் கழட்டி உள்ளே வர முயன்றவனை "பரவாயில்லை" என்றாள்.
சிரித்துக் கொண்டே "நான் வீடு கட்டுபவன். அதன் மதிப்புத் தெரியும். நானே மதிக்கலேன்னா தப்பில்லையா" என்றவனை மறுபடியும் ஏற இறங்கப் பார்த்து முடிப்பதற்க்குள், அவன் வண்டியை ஸ்டார்ட் பண்ணி நகர்ந்து  கொண்டிருந்தான்.
அன்றிலுருந்து அவள் மனதில் அஸ்ட்ரானமிக்கு முன்பாக வேறு ஏதோ ஒன்று இடம் பிடிக்க ஆரம்பித்தது. தண்ணீர் தொட்டியை இளங்கோவின் ஆட்கள் கொத்திப் பூசியபோது மொட்டை மாடிக்கு அடிக்கடி போனாள்.
"என்னடி ஆச்சு உனக்கு. அஸ்ட்ரானமில மார்க்கு குறஞ்சுருக்கு" ன்னு தங்கை கேட்ட போது "ஹூம். க்ரஹம் சரியில்லை" ன்னு நக்கலாச் சொன்னா.
புன்னகைல ஆரம்பிச்சது அவளுக்கே தெரியாமல் எஸ்எம்எஸ் பரிமாற்றங்கள் தாண்டும் பொழுது வெகு தூரம் போயிருந்தார்கள். இளங்கோ வீட்டுல புரிஞ்சுண்டாலும், இவ அப்பாதான் ஒத்துக்கவே மாட்டேனுட்டார்.
"அவன் வெறும் எல், எம் ஈ தான். ஒரு ஸிவில் இஞ்சினீயர்னா கூட பரவாயில்ல. நாளைக்கு ரொம்பக் கஷ்டப் படுவே".
"திடீர்ன்னு அவன் உன்னை விட்டுட்டா" என்று அப்பா தன் மனக் குமுறலை க்ரோதமாக வெளியிட்ட போது முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு " என்ன நடந்தாலும், உங்க கிட்ட வந்து மட்டும் நிக்க மாட்டேம்ப்பா"ன்னு வீராப்பு பேசிட்டுக் கிளம்பியவள் தான். கல்யாணத்துக் கூட கோவிலுக்கு அம்மாதான் தங்கையுடன் வந்திருந்தாள்.
"அப்படி என்னம்மா தப்பு பண்ணிட்டேன்னு" மனம் தாங்காமல் கேட்டவளை அம்மாதான் சமாதனப் படுத்தினாள் " கொஞ்ச நாள் ஆனால் கோபம் தணியும். அதுவரை பொறுமையாய் இரு".
லதாவைக் கையைப் பிடித்த நேரம், இளங்கோவிற்கு மள மளவென ஆர்டர்கள் குவிந்தது. ஒரே வருடத்தில் கோவையில் ஒரு நம்பிக்கையானவனாய்ப் போனான். அப்புறம் தான் அடித்தது யோகம். என்றுமில்லாமல் அன்று சீக்கிரமே வீடு திரும்பியவன், லதாவின் கையைப் பிடித்து "சென்னையிலுள்ள ஒரு பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனினியிலுருந்து ஆர்டர் வந்திருக்கு. இன்னமே நம்ப ஆர்டர் தேடி அலய வேண்டாம். மாசா மாசா சம்பளம் தானா வரும்" என்று சொன்னவனை, விக்கித்துப் பார்த்தாள்.
"கவலைப் படாதே. குடுக்குற தெய்வம் கூரையப் பிச்சுண்டு கொடுக்கும்: என்றவன் சென்னை வந்து வீடு பார்த்து அவளை வா என்று சொன்ன போது ஆறு மாதம் ஓடிப் போயிருந்த்து.
சடசடவென்று இடித்த பலமான இடியும் கண்ணைப் பறிக்கும் மின்னலும் , லதாவின் கனவைக் கலைத்து நிகழ் காலத்துக்குக் கூட்டி வந்தது. கிட்டத் தட்ட வண்டி வந்து ஒரு மணி நேரம் ஆகியும் இளங்கோ வராததால், செல் போன் போட்ட போது, மௌனமே பதிலாக வந்தது. மழை போல் என்று நினைத்துக் கொண்டாள்
இனியும் காத்திருந்து ப்ரயோஜனமில்லை, சம்பள நாள் வேற, மேஸ்த்ரி, சித்தாள்களுக்கெல்லாம் பட்டுவாடால பிசி போல என்று நினைத்து, ஆட்டோவைக் கூப்பிட்டாள்.
"எங்கேம்மா" என்ற ட்ரைவரிடம் " போருர் பக்கத்தில் மௌலிவாக்கம் " என்றாள் !

தூரத்து இடியைக் கேட்டு இளங்கோவின் வார்த்தையை நினைத்துப் புன்னகைத்தாள் " கூரையை பிச்சுண்டு கொடுக்கும்"

Published in www.sirukathaigal.com on 18-Jul-2014

டப்பாஸு

படபடவென வெடிச் சத்தம் ஆரம்பித்தவுடன் எழுதிக் கொண்டிருந்த ஸ்லேட்டை அப்படியே போட்டு விட்டு ஒரே தாவலில் வாசலுக்கு ஓடிய சுனிலைப் பார்த்து அம்மா வியந்து போய் மோவாயில் கை வைத்து "அது இன்னாதான் இருக்கோ. டப்பாஸு சத்தம் கேட்டா உளுந்தடிச்சிகிட்டு ஓட்றான்" என்றாள். அந்த சரம் வெடித்து முடிந்து, புகை மண்டலமும் கலைந்தபின் தான் மனமில்லாமல் உள்ளே வந்தான் பத்து வயது சுனில். காச நோயால் லொக்கிக் கொண்டிருக்கும் அப்பாவிடம் வந்து "எல்லாரும் வெடிக்க ஆரம்பிச்சுட்டாங்கப்பா. டப்பாசுக்குக் காசு குடு" என்றான். இருமலுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்த அவர் கையை ஓங்கினார் "போடா. சோத்துக்கே வழியில்லை, அம்மா வக்கீல் வூட்டுக்குப் போய் வந்தப்புறம்தான் தெரியும். இதுல டப்பாசாம், டப்பாஸு". சுனிலோ விடாமல் "இந்த வீதிலே யல்லாப் பசங்களும் மூணு நாளா வெடிக்கறாங்க. நாளக்குத் தீவாளி. இன்னும் எப்பத்தான் வாங்கறது" என்றான் விவரம் புரியாமல். கொஞ்ச நேரம் புலம்பிட்டு ஒண்ணும் தேறாதுன்னு தெரிஞ்சுண்டு எழுந்து தெரு நெடுகப் போய் வெடிக்காத 'புஸ்ஸான " டப்பாஸுகளைப் பொருக்க ஆரம்பித்தான்.
இரண்டு தெரு தாண்டியவுடன் கையிலுருந்த பால் கவரைப் பார்த்தான் - பாதி ரொம்பி இருந்தது. பெரிய வீதிக்குப் போனால் ரொப்பிடலாம்னு அவசரமாக நடந்தான். பெரிய தெருவில்தான், அந்த ஊர் பரம்பரைப் பணக்காரர்கள், வியாபாரிகள் போன்ற மக்கள் வசிப்பதால், எப்பொழுதுமே பெரிய தெருவுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டமிருக்கும். இன்றும் சுமாரான சிறுவர் கூட்டம் ஆவலோட வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த்த்து. உயரே போன ராக்கெட் வெடித்தவுடன் ஒரு பெரிய விஸில். குருவி வெடிகளும், லட்சுமி வெடிகளும் காதைப் பிளந்தன. ஓலைப் பட்டாஸும், ஊசி வெடிகளும் கேட்பாரற்றுக் கிடந்தன- எல்லா வெடிகளும் தீர்ந்தப்புறம், தீபாவளிக்கு மறுநாள் தான் இவைகளுக்கெல்லாம் வாழ்வு வரும்- அது வரை அனாதை தான்.
வெடிக்காத பட்டாசுகளை பெரிய தெருப் பிள்ளைகள் எடுக்க மாட்டார்கள்- சுனிலைப் போன்றவர்கள் தான் பாய்ந்து பாய்ந்து எடுப்பார்கள். இன்றும் ஒரு கூட்டம் சுறு சுறுப்பாகப் பொறுக்கிக் கொண்டிருந்தது - சுனிலும் சேர்ந்து கொண்டான். ஒரு எலெக்ட்ரிக் சரம் வெடிக்காததை யாரும் பார்க்காததால், சுனில் ஒதுங்கி தீப்பொறி மேல படாமல் போன போது, எங்கிருந்தோ வந்த ராக்கெட் திசை மாறி அவனை நோக்கியதும் அலறி ஓடினான். பயத்தில் பட்டாசுப் பெட்டிகளின் மேல் காலை வைத்து விழுந்தான். உடனே எழுந்து வெடிக்காத சரத்தை எடுத்த போது கூடவே பக்கத்தில் இருந்த ஒரு ஊசிக் கட்டும் கையில் சிக்கிக் கொண்டது அவனுக்கே தெரியாது. அவனுடைய ஒரே நோக்கு தீ மேல படாமல் ஓடி வெடிக்காததை எடுப்பது,.
அப்படி ஓடியபோது தான் போடேரென்று முதுகில் ஒரு அடி விழுந்தது. "ராஸ்கல். நம்ப தெருலேயே திருடரயா" என்று. அப்பத்தான் அதை கவனித்த சுனில் "சார், சார் நான் திருடல்ல சார்" என்று ஹீனமாக் கத்தியதைக் கேட்க யாருக்கும் நேரமில்லை. தெருவின் முக்கியத்துவத்தால் அவரவர்கள் வந்து ஒரு தர்ம அடி வைத்து, முதுகை பழுக்க வைத்து விட்டார்கள். இதில் கோடி வீட்டு சேட்டுப் பையன் அடுத்த வீட்டு காலேஜ் படிக்கும் பெண்ணுக்கு சீன் காட்டுவதற்க்காக துறத்தி துறத்தி வந்து பெரிய கம்பி மத்தாப்புக் கம்பியால் அடித்தது வலித்தது, சூட்டினால் எரிந்தது. திரும்பி பக்கத்தில் தண்ணீர் வைப்பதற்க்காகக் காலியாய் இருந்த இரும்பு வாளியை எடுத்து ஒரே போடு போட்டதில் சாய்ந்த சேட்டுப் பையன் தலையிலிருந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. 'மாமூலாக' அந்தப் பக்கம் வந்த ரெண்டு போலிஸ்கார்கள் அவனை இழுத்துப் போய் திருட்டுக் கேஸ் போட்டு அவன் சீர் திருத்தப் பள்ளியிலுருந்து திரும்பிய போது ஊர் மட்டுமில்லை வீடும் மாறி இருந்தது.
இருமலுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் அப்பா திண்ணையைக் காலி செய்திருந்தார். அம்மாவுக்கு ஜெயிலுக்குப் போன பிள்ளையால் வேலையும் போயிடுத்தாம். பெரிய பஸ் ஸ்டாண்டில் பூ வித்துக் கொண்டிருக்கிறாள். சேட்டு, அடகு வெச்சிருந்த விளை நிலத்தையும் புடுங்கிக் கொண்டாராம். மொத்தத்தில் ஏதோ ஏழ்மையாய் இருந்தாலும் கண்ணியமாக இருந்த குடும்பம் நடு ரோட்டுக்கு வந்து விட்டது. சுனிலுக்கு இன்னமும் அவன் என்ன தப்பு செய்தானென்று புரியவில்லை.
டொக் டொக் என்று சத்தம் கேட்டு அதிர்ந்து இன்நாளுக்கு வந்த சுனில்சேட்  ஒரு ஏழைப் பையன் தான் கார்க்கதவை விரலால் தட்டினான் என்று உணர்ந்து கண்ணாடியை தழைத்த போது, அந்தச் சின்னப் பையனின் கிழிந்த ட்ராயர் தெரியவில்லை. ஆனால் "ஸார் டப்பாசுக்குக் காசு குடு சார்" என்றது நெஞ்சைப் பிழிந்தது. தட்டில் விழுந்த நூறு ரூபாயைப் பையன் பார்ப்பதற்க்குள் காரை விரட்டினான்.

வெடிக்காத ஒரு வெடியால் தன் குடும்பமே வெடித்ததில் மனம் வெறுத்த சுனில் யாருக்கும் சொல்லாமல் திருட்டு ரயில் ஏறி , பாவாவிடம் என்ன வேலை என்று கேட்காமல் சோத்துக்காக எந்த வேலையும் செய்யத் துணிந்ததால் சாராயத்திலுருந்து , ஏதோ பாவா கொடுத்த வெள்ளைப் பௌடர் வரை எல்லாவற்றையும் ஊர் ஊராக எடுத்துச் சென்றதில் நல்ல பேரெடுத்தான். இன்று அவன் செய்யும் வேலை அவனுக்கே சிரிப்பு வந்தது. பெரிய போரளிகளிலிருந்து, சின்ன சின்ன நாடுகளிலும் சுனில் சேட்டைத் தான் கேட்பார்கள் "வெடி இருக்கா" என்று. கேட்டு இரண்டே நாளில் கை வெடி குண்டும், நாட்டுத் துப்பாக்கிகளும் கை மாறி அப்படியே கோடீஸ்வரனான். ஆனால் அவனைப் பொருத்தவரை அவன் பழி வாங்கியது ஆயுதங்கள் விற்றதில் இல்லை, கோடீஸ்வரன் ஆனதிலில்லை. அவன் தன் பெயருக்குப் பின்னால் சேர்த்துக் கொண்ட 'சேட்' தான். அவனைப் பொருத்தவரை அந்தப் பையன் தன்னைத் துரத்தா விட்டால் இதெல்லாம் நடந்திருக்காதாம் !

Published in www.sirukathaigal.com on 06-Nov-2013

இடி

 கம்ப்யூடரில் மிக ஸ்ரத்தையாகப் பார்த்துக் கொண்டிருந்த சாந்தி அந்த அதிர்வினால் திடுக்கிட்டு நிமிர்ந்தாள். இடுப்பில் ஒரு சின்ன இடி. உதை என்றால் அப்படி ஒரு உதை
 அவளை அந்ததனியார் வங்கியில் வேலை செய்ய முடியாமல் வயிற்றில் இருந்த குழந்தை உதைத்தது. தலை சுற்றல் வேறு. பக்கத்து கௌண்டரில் இருந்தவரை கொஞ்சம் பார்த்துக்கச் சொல்லி விட்டு உள்ளே போய் ஒரு முறை வாந்தி எடுத்து, ஒரு புளிப்பு மிட்டாய் அடக்கியபின் கொஞ்சம் தெளிவானதஎன்ன இருந்தும் இந்தக் குழந்தை எனக்கு வேண்டும் என்று மீண்டும் நினைத்த போது அவளுக்குள் அந்த அவஸ்தைகளையும் மீறி ஒரு புன்னகை பூத்தது.
வீட்டில் பெற்றோர் பார்த்து எல்லா சம்ப்ரதாயங்களுடன் கோபியைக் கைப்பிடித்தவள் தான் சாந்தி. திருமணமாகி இரண்டு வருடங்களுக்கு ஒரே ரோஜாக்கள் தான். பெற்றோரில்லாத கோபி அவளை ராணி போலத் தாங்கினான். கார் வாங்கி, தாம்பரம் பக்கம் புது வீடும் கட்டி எல்லாமே சினிமா மாதிரி இருந்தது. சாந்தி அம்மா தன் பெண்ணுக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைந்ததற்க்கு நன்றி சொல்லப் போகாத கோவில்களே இல்லை.
"இவ்வளவு வசதி இருந்தும் எனக்கெதற்க்கு வேலை, வீட்டிலுருந்து வீட்டையும் உங்களையுமே கவனித்துக் கொண்டால் போதாதா" என்ற அவளின் வாதம் எடுபடவில்லை. அவள் சுதந்திரமாக இருக்க வேண்டும், உலகத்திலுள்ள நல்லது, கெட்டதுகளுக்கு அடி பட்டால்தான், அவளுக்கு தைரியம் வரும் என்றான். அவள் யாரையும் சார்ந்திருக்கக் கூடாது, தன்னால் வாழ தைரியம் வேண்டும் என்று அவளைக் கட்டாயமாக வேலைக்குப் போகச்சொன்னானேயொழிய, அவள் சம்பளத்தை என்றைக்கும் கேட்டதில்லை. "உங்க பாங்க்லேயே போட்டு வை. தேவைப் பட்டால் எடுத்துக்கலாம்" என்றான்.
குடுக்கற தெய்வம் கூரையைப் பிச்சுண்டு குடுக்கும்னுதான் கேள்விப் பட்டிருந்த சாந்தி அன்று கோபிக்கு லேசான ஜுரம் என்பதால் வீட்டில் தூங்கச் சொல்லி விட்டு ஆபிஸுக்குக் கிளம்பிய போதே வானம் கருமையாக உறுமிக் கொண்டிருந்தது. அவள் பாங்குக்குள் நுழையுமுன்னே மழை பெரிதாகி அரை மணியில் தெருவே வெள்ளக் காடாயிற்று. மதியம் சாப்பிட டைனிங் ஹால் கிளம்பும் போது காதே பிளப்பது போல் ஒரு இடி இடித்து சுருண்டு சுருண்டு போனது. கரண்ட்டும் போனவுடன் எங்கேயோ இடி விழுந்துருக்கு, சீக்கிரம் சாப்டுட்டு வேலையை முடிச்சுண்டு கிளம்பணும்னு நினைச்சுண்டாள். அவசரமாக வேலையை முடிக்கும் போதுதான் சாந்திக்கு அந்த போன் வந்தது. அவள் எதிர் வீட்டில் இருக்கும் ராமனாதன் போனில் "உடனே கிளம்பி வாம்மா. நம்ம தெருவுல இடி இறங்கிடுத்து" ன்னார்.
வயிற்றைப் பிசைய ஆட்டோவில் ஒடிய போது தான் தெரிந்தது, இரண்டாவது இடி விழுந்தது எங்கோ இல்லை, தன் வாழ்க்கையில் என்று. தெரு முனையிலேயே நல்லகூட்டம் இவளைக் கண்டதும் விலகியது. எட்டி பார்த்தால் விவரம் தெரிந்தது, அவள் வீட்டின் மேல் தான் இடி இறங்கி, உள்ளே இருந்த கோபி கரிக் கட்டையாகிப் போனான் என்று. அதற்க்கு மேல் என்ன நடந்தது என்று அவளுக்குத் தெரியாது, ஏனென்றால் அவள் பல இடித் தாக்குதல்களில் மயக்கமாகி ராமனாதன் மனைவி மேல் சாய்ந்தாள்.
பிறகு நடந்தவை கனவு போலிருந்தது.  உலகமே என்றிருந்த கோபியும் போய், சுத்தமாக பிளவு பட்ட வீட்டில் பழுது பார்த்தாலொழிய இருப்பது நல்லதல்ல என்றதால் தாம்பரத்தை விட்டு வேளியேற வேண்டிய சூழ்னிலை. ஆனால் அதற்க்கு வாங்கிய கடன், கார்க் கடன் என்று பணத்தின் தேவை அவளை எந்த வேலை வேண்டாமென்று நினைத்தாளோ அது தான் இப்பொழுது ஜீவனத்துக்கு வழி என்று நினைவு படுத்தியது..
"கடவுள் இப்படியெல்லாம் கூடச் செய்வாரா. எல்லாம் நல்லாத்தானே போய்க்கொண்டிருந்தது. ஏன் இப்படி ஒவ்வொன்றாக மாத்தி மாத்தி அடி" என்று மறுகிப் போனாள். கொஞ்ச நாள் அழுகைக்கப்புறம், சிறிது தெளிந்து இந்தச் சிசு தான் தன் பிடிப்பு என்றாகி நாட்களை ஒரு வைராக்கியத்துடன் நகர்த்த ஆரம்பித்தாள்.
குழந்தை ஜீவனின் வளர்ச்சியில் மெய் மறந்து, வேலையை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, பதவி உயர்வு வாங்கினால் வெளியூர் போக வேண்டியதால் அதையும் புறக்கணித்து, தன் அப்பா போனதையும் ஜீரணித்து, எல்லாமே ஜீவன் தான் என்று வாழ்ந்ததில் நாட்கள் போனதே தெரியவில்லை. இவ்வளவுக்கும் தன் அம்மா மட்டுமே துணையாக இருந்தது அவளுக்கு ஒரு பெரிய சௌகர்யம்.
ஜீவனின் இஞ்சினீயரிங் படிப்புக்கு தன் பாங்கிலேயே கடன் வாங்கி அந்த பெரிய ஐ.டி கம்பெனியில் சேர்ந்தவுடன் ஜீவன் சொன்னது கோபியை நினைவுப் படுத்தியது - "சம்பாதித்தது போதுமே. வீட்ல ரெஸ்ட் எடுத்துக்கோ". என்னவோ தெரியல்ல, இந்த வேலைக்குப் போரது ஒரு பொழுது போக்கா இருக்கறதாலா, இல்லை தனக்கு இன்னும் பிடிப்பு வேண்டும் என்பதானாலோ இல்லை அன்று கோபி சொன்ன சொல்லை இன்றும் தட்டக் கூடாது என்பதாலோ "ஆகட்டும். எப்ப ஸ்ரமமாக இருக்கோ,அப்ப விட்டுடரேம்ப்பா" என்றாள்.
அதே மாதிரி ஒரு மழை நாள்ல தான் புள்ளைய இன்னும் காணுமேன்னு வாசலைப் பாத்துண்டு உட்கார்ந்திருத்தப்போ, ஒரு பெரிய காரில் வந்திறங்கினான் ஜீவன். கூட வந்த பெரியவரின் கோட் சூட்டிலும், காரைத் திறந்து விட்ட சீருடை போட்ட ட்ரைவரையும் பார்த்த உடனே அம்மா கேட்டாள் " யாரோ பெரிய ஆபீஸ்காராளா?"  என்று. உள்ளே வந்தப்புரம் தான் ஜீவன் சொன்னான்- "அம்மா, இது என் கூட ஆபிஸ்ல வேலை செய்யற லதாவின் அப்பா. சென்னைக்கு வெளியே துணி எக்ஸ்போர்ட் பண்ற கோடீஸ்வரர் ".
இரண்டு நாள் கழித்து, ஒரு சனிக்கிழ்மை இரவு சொன்னான் "அம்மா. எனக்கு லதாவைப் பிடிச்சிருக்கு. அவளுக்கும் ஓ.கே. ஏன்ன சொல்றே?"
பொங்கி வந்த சந்தோஷத்துடன் "உங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சுருந்தா நான் என்னடா சொல்லப் போரேன். உனக்கும் கல்யாண வயசு வந்தாச்சு. முறைப்படி ஒரு நாள் அவாளை வந்து பேசச்சொல்லு. முடிச்சுடலாம்" என்றாள்.
"அப்படியே நம்ம வீட்ட கட்டின இஞ்சினீயர் நாராயணனையும் நாளைக்கு ஞாயிற்றுக் கிழமையா இருக்கு. வரச் சொல்லு. மாடியில இன்னொரு பெரிய போர்ஷன் கட்டச் சொல்லிடலாம். இந்த இடம் இப்ப கொஞ்சம் கீக்கிடம்தான். அதுவும் வசதியா வாழ்ந்த பொண்ணுக்கு இன்னும் பெரிசா வேணும்" என்றாள்.
படுக்கத் தயாராக பல் தேய்ச்சுண்டிருந்த ஜீவன் கொஞ்சம் தயங்கி வந்து கட்டில் பக்கத்தில் நின்றவனை "என்னடா" என்றாள்.
"அம்மா. சொல்ல மறந்துட்டேனே. லதாவுக்கு அம்மா கிடையாது. இவ குழந்தையாய் இருக்கும்போதே போய்ட்டாளாம். அவ அப்பாதான் இவளை அம்மா மாதிரி பாத்துப் பாத்து வளத்துருக்கார். அவளால அவர விட்டுட்டு வர முடியாதாம்மா. அவ அப்பாவுக்கும் யார் இருக்கா, பாவமில்லையா" என்றான்.
விருட்டென்று தலையைத் தூக்கிப் பார்த்த அம்மாவை நேராகப் பார்க்க முடியாமல் "என்ன அவாளோடையே இருந்து அந்த எக்ஸ்போர்ட் பிசினசையும் பார்த்துக்கச் சொல்றா. பக்கத்துல ஒரு கிலோமீட்டர் தூரத்துல தானே அவாளும் இருக்கா. ஒன்ன அப்பப்ப வந்து ஈசியா பாத்துக்கலாம்மா" என்றான்.
கொஞ்ச நேர மௌனத்துக்குப் பின் ஜீவன் " நீ என்னம்மா சொல்ரே" என்றான்.
தலையை மறு பக்கம் திருப்பி தன் முகத்தை மகனுக்குக் காட்ட விரும்பாத அவள் " நாளைக்கு இஞ்சீனீயர் வேண்டாம், வீட்டு ப்ரோக்கரை வரச் சொல்லு" என்றாள்.
ஏன் என்ற கேள்வியைக் கண்ணில் தாங்கிய ஜீவனைப் பார்த்து "இத்தனை நாளா ஒன்னைப் பாத்துக்க வேண்டி இருந்ததால ப்ரமோஷனே வேண்டாம்னு இருந்தேன். இப்ப உனக்கு ஒரு துணை கிடைச்சப்புறம் , நான் நிம்மதியா வெளியூர் மாத்தினாக் கூட போலாம், இந்த வீட்டை வாடகைக்கு விட்டுட்டு" என்று லைட்டை அணைத்தாள்". 
கீழே படுத்துண்டு இருந்த அம்மா கேட்டாள் "என்னடி, ஜீவன் போறேங்ரானா"
அந்த ரூம் இருட்டின் மெல்லிய நைட் லைட் வெளிச்சத்தில் தெரிந்த கோபியின் படத்தைப் பார்த்த படி சொன்னாள் " என் ஜீவந்தான் என்னிக்கோ போயிடுத்தேம்மா"

தூரத்தில் கேட்ட வானத்தின் உறுமலைக் கேட்டு நினைச்சுண்டாள் "என் வாழ்க்கைக்கும் இடிக்கும்தான் எவ்வளவு ஸ்னேகம் " என்று.

Published in www.sirukathaigal.com on 29-Sep-2013

நம்பிக்கை

பின்னாலிருந்து வந்த வாகனங்களின் சத்தத்தால் பாலு சிலிர்த்து தன்னிலைக்கு வந்தான். வலது கையை முறுக்கி ஸ்கூட்டிக்கு கொஞ்சம் உயிர் கொடுத்து உசுப்பேத்தினான். மனம் தன்னையறியாமல் ஸ்லோகங்களை முணுமுணுத்தாலும் நினைவுகளெல்லாம் இன்று அவன் வேலை செய்யும் பாங்கில் நடப்புப் பற்றித்தான். பாங்க்கில் கேஷியர்களுக்கு என்றுமே அன்றைய வேலை பற்றி நினைவுகள் கொஞ்ச நேரம் ஊஞ்சலாடிக்கொண்டேதான் இருக்கும். அதுவும் இன்றைய நாள்போல முதவார சனிக்கிழமைன்னா கேக்கவே வேண்டாம், கூட்டம் அலை மோதும். இன்றும் மோதி தாறுமாறாக இருந்தது. தினத்தை விட இன்று அவனுக்கும் கணக்கு சரிபார்க்கும் வரை டென்ஷன் ஜாஸ்த்திதான். என்னதான் இத்தனை வருஷங்கள் பாங்க்கில் இருந்தாலும், ஒவ்வொரு முறை கேஷியர் வேலை பார்க்கும் ஆறு மாதமும், பகவானைக் கூப்பிடாத நாளேயில்லை- அவ்வளவு பயம். போன முறை கேஷ் டெர்ம் முடிந்ததும் திருப்பதிக்கு ஒரு நடை போய் வந்தான்னா பாத்துக்கோங்களேன் !   
இன்றும் பணி முடிந்து வரவு செலவு போக மிச்ச கையிருப்புப் பணம் எவ்வளவுன்னு பாத்த போது தான் தெரிந்தது கையிருப்பில் ஐயாயிரம் ரூபாய் அதிகம் என்று. பாலு ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக சரி பார்த்த போதும் அதே வித்தியாசம் தான் வந்தது- ஒரு பாங்க் கேஷியர் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்- ஒரு தடவை அதிகம் வரும், மறுபடி எண்ணினால் அதுவே குறைவாகக் காட்டும்- முடிவில் சரியாகும். இது தான் அனுபவம். சில சமயம் பாலுவுக்கு இதுதான் வாழ்க்கையின் தத்துவமோ என்று கூடத் தோன்றும்- ஒரு சமயம் ஜாஸ்த்தி, பல சமயம் குறைவு  ஆனால் முடிவில் எல்லாம் சரியாகும். ஆனால் இன்று என்னவோ அப்படித் தோன்றவில்லை. கொஞ்சம் பொறுமையாக ஒவ்வொரு வவுச்சராகப் பார்த்ததில் அந்த கரண்ட் அக்கௌன்ட் பார்ட்டி ஐம்பது ரூபாய் கட்டுக்கு பதில்  நூறு ரூபாய் கட்டு கட்டியிருந்தார்- அதுதான் ஐயாயிரம் வித்தியாசம்.
வித்தியாசத்தைக் கண்டு பிடித்தவுடன் மனமெல்லாம் ஒரே பரபரப்பு. "நிச்சயமாக அவ்வளவு பெரிய கம்பெனிக்கு இதெல்லாம் ஜுஜுபி கண்டு கொள்ளவே மாட்டார்கள்". "அப்படிக் கண்டு பிடித்தாலும் நான்தான் எடுத்தேன்னு நிரூபிக்கவே முடியாது". "போன மாசம் நூறு ரூபாய் கொரஞ்சபோது நாந்தேனே கைய விட்டுக் கொடுத்தேன். இப்ப ஜாஸ்தி இருந்தா எடுத்துண்டா என்ன?" - அடுத்த வாரம் ஆபீஸ்ல போற ஏற்க்காடு டூரூக்கு கண்டிப்பாக உதவும். இப்படி அவனுக்குள்ளே பாலச்சந்தர் படம் போல் மாறி மாறி எண்ணங்கள் ஓடின. போராக் குறைக்கு அவனின் ஆத்ம நண்பன் திலீப் வேறு " ஜாஸ்தி இருக்குன்னு சன்ட்ரீஸ்ல வெச்சே... அனாவசியமா மெமோ தான் குடுப்பாங்க- பேசாம பெருமாளே குடுத்தார்னு காதும் காதும் வெச்சா மாதிரி பாக்கெட்ல போடு. அக்கௌன்டன்ட் நாயருக்குத் தெரிஞ்சா ஹெட் ஆபீசுக்கு சொல்லி வேட்டு வெச்சுடுவான்னு" சொல்லி கொஞ்சம் நாக்குல தேனைத் தடவி வயத்துல பயத்தையும் ஊட்டினான். பேசாம யாருட்டயும் சொல்லாம ஐயாயிரம் ரூபாய பாக்கெட்ல போட்டுண்டு வீட்டுக்கு கிளம்பிட்டான். 
வீட்டுக்கு வந்தவுடன் மனைவி வனஜா காப்பியைக் கையில் கொடுத்து பக்கத்தில் நின்றாள். அந்தக் கால மனுஷியானதால், புருஷன் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும் வரை எதுவும் பேசி தொந்தரவு செய்யாமல் பாலு பேசக் காத்திருந்தாள்.
 "ரங்கு எங்கே?" என்றான்.
"விளையாடப் போயிருக்கான். இன்னிக்கு முழுக்க ஜுரம் இல்லை. அதான் கிளம்பிட்டான்".
பதினஞ்சு வயசுப் பயலுக்கு அப்பப்ப ஜுரம் வருது. அப்புறம் தானே சரியாயிடுது. அப்படியே விடக் கூடாதுன்னு டாக்டர் கிட்ட காமிச்சால், ப்ளட் டெஸ்ட் எல்லாம் எடுத்துட்டு "ஒரு வகையான டிஃபிஷியன்ஸி. இதுக்கான மருந்து அமெரிக்கா மாதிரி இடத்தில தான் கிடைக்கும். இந்தியாவுக்கு இன்னும் வரல. யாராவது உங்களுக்குத் தெரிஞ்சவா அமெரிக்காவிலேந்து வந்தா வங்கிண்டு வரச் சொல்லுங்கோ. இங்க வாங்கி உங்களுக்குக் கட்டுப் படியாகாது " என்றார்.
அமெரிக்காவில் உள்ள மச்சுனனைக் கேட்ட போது " அது ஒரு புட்டி எண்பது டாலர் ஆகும். அதை இந்தியாவுக்குள் கொண்டு வரணும்னா மேலும் கொஞ்சம் ட்யூடி கட்டி ரொம்ப செலவாகும். ஏதாவது ஒரு கம்பெனி கூடிய சீக்கிரம் இம்போர்ட் பண்ண ஆரம்பிக்கும். கொஞ்சம் வெய்ட் பண்ணலாமே" என்றான். ரங்குவுக்கு பல நாள் ஸ்கூல் போவது மட்டுமில்லாமல், அடிக்கடி ஜுரத்தினால் உடம்பும் மெலிஞ்சுண்டே வந்தது கொஞ்சம் கவலையைக் கூட்டியது. ஈஸ்வரோ ரக்ஷதுன்னு பெருமாளுக்கு வேண்டிண்டு தெரிஞ்சவாள் கிட்டேல்லாம் சொல்லிட்டு அமைதியானான். இந்த சமயத்தில்தான் நேற்று மறுபடியும் ஜுரம் கொஞ்சம் அதிகமானதால், லேசான ஃபிட்சும் வந்தது. டாக்டர் இதை அப்படியே விடக்கூடாது ஆனால் அந்த மருந்தை விட்டால் வேறு வழியே இல்லன்னு வேற சொல்லிட்டார்.
இந்தக் கவலைக்கிடையில் தான் இன்று எதிபாராத வரவு. இதைப் பெருமாள் தான் ரங்குவுக்குக் கொடுத்தார்ங்கரதை எப்படி மறுக்க முடியும்னு சொல்லி சமாதானமானான். அடுத்த வார முதலில் ஆபீஸ் நண்பர்களோட ஏர்காடு மூன்று நாள்,அதுக்கப்புறம் அப்பா திவசம், பெருமாள் சமாராதனை எல்லாம் முடித்து அடுத்த வெள்ளிக் கிழமை கொஞ்சம் மன இருக்கம் குறைந்துதான் வந்தான். அன்றும் பாங்க்கில் நல்ல கூட்டம் தான், ஆனால் சமீபத்திய லீவால் ஸ்ரமம் ஒன்னும் தெரியல்ல பாலுவுக்கு. இன்று அந்த மருந்துக் கம்பெனியிலிருந்து பணம் கட்ட வழக்கமாக வரும் கோவிந்தன் என்ற பெரியவர் வராமல் வேறு யாரோ வந்ததை அரை குரையாகத்தான் கவனித்தான். ஆனால் ஓன்றும் கேட்கவில்லை நிற்க்கும் கூட்டத்தால்.
கவுண்டர் நேரம் முடிந்தவுடன் தான் கவனித்தான் அவன் கேஷ் கேபின் எதிரே கோவிந்தன் நிற்ப்பது. மனம் பக்கென்றது. "சார் . கௌன்டர் க்ளோஸ் ஆய் அரை மணி ஆயிடுச்சே. இவ்வளவு நாளா வர இங்களுக்கே தெரியாதா. நாளைக்கு  வாங்க சார் " என்றான் சற்று தேவையில்லாத கடுப்புடன். அவரோ "நான் பணம் கட்ட வரலேப்பா. உன்னைக் கொஞ்சம் பார்த்து பேசிட்டு போலாம்னு தான் வந்தேன். அதுக்காகத்தான் கௌண்டர் முடியும் வரை காத்திருந்தேன்" என்றார்.
சற்று வியர்த்துப் போய் "எங்கிட்ட என்ன சார் பேசரத்துக்கு இருக்கு" என்று போலியான அலுப்புடன் எழுந்து நின்றான்.
கோவிந்தன் சற்று கிட்ட வந்து பையிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்துக் கொடுத்தார்.
"இதென்ன" என்ற பாலுவுக்கு "ஒரு மூணு மாசம் முன்னாடி அமெரிக்காவிலேந்து ஓங்குழந்தைக்கு ஒரு மருந்து கேட்டயோல்லயோ, அது எங்க கம்பெனிலே இப்பத்தான் இம்போர்ட் பண்ண ஆரம்பிச்சிருக்கா. நான் ஸ்டாஃப் கோட்டாவில உனக்காக அப்ளை பண்ணினேன். போன வாரம் வந்தது. இங்க வந்து பாத்தால் நீ லீவில இருக்கறதாச் சொன்னா. உங்காத்து அட்ரஸ் தெரியல்லே. அதான் " என்றார்.
"எவ்வளவு சார் " என்றான்
" நாலாயிரம் ரூபாய்ப்பா. இப்ப இருந்தாக் குடு. இல்லேன்னா முப்பதாம் தேதி சம்பளம் வந்தவுடனே குடு. முதல்ல குழந்தைக்கு மருந்தைக் குடு" என்றார்.
"ஏன் முப்பதாம் தேதி. உடனே கம்பெனீல கட்ட வேண்டாமா" என்றான்
"இல்லப்பா. என்னோட டெர்மினல் பெனிஃபிட்ல புடிச்சுண்டுட்டா" என்றவரை விக்கித்துப் பார்த்தான். "என்ன சொல்றேள்"?
"ஆமாம்பா. போன மாசம் கேஷ்ல ஐயாரம் ருபாய் குறைஞ்சதுன்னு, சர்ப்ரைஸ் இன்ஸ்பெஷன்ல கண்டு பிடிச்சா. புதுசா வந்திருக்குற எம் டீ ரொம்பக் கண்டிப்பு ஆசாமியாம். கேஷ்லலெல்லாம் பரிதாபம் பார்க்க முடியாதுன்னு டிஸ்மிஸ் பண்ணிட்டா. நேத்திக்குதான் ஃபைனல் செக் குடுத்தா, இந்த நாலாயிரத்தைக் கழிச்சுண்டு" என்றார்.
அதிர்ச்சி விலகாமல் " இப்ப என்ன பண்ணப் போறேள்" என்றான் பாலு.
"எனக்கு என்ன சின்ன வயசா. இன்னும் ஆறு மாசத்தில எப்படியும் ரிடயர்மெண்ட் தான். சித்த முன்ன கொடுத்துட்டார் பெருமாள்" என்றார்.
"உம்புள்ளக்குக் கண்ணத் தொறந்த பெருமாள் எனக்கு வழியா காட்ட மாட்டான். முதல்ல போய் குழந்தைக்கு மருந்த ஆரம்பி"- சொல்லிண்டே நடக்க ஆரம்பித்தார்

பாலுவுக்கு யாரோ பளீரென்று கன்னத்தில் அடித்தால் போலிருந்தது. தலையைக் குனிந்தபோது, மேஜை மேல் இருந்த காலண்டர் தேதி கிழிக்காமல் போன சனிக்கிழமையையே காட்டியது.        

Published in www.sirukathaigal.com on 18-Aug-2013

பரிகாரம்

மூன்று மணி நேரப் பயணத்துக்குப் பின் அந்த தனியார் பஸ் கோவிலருகே வந்து பெருமூச்சு விட்டு நின்றது. பயணக் களைப்பிலும், காலை சாப்பிட்ட டிபன் செரிக்காமல் பஸ் மலை ஏறும்போது எடுத்த வாந்தியிலும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தவர்கள் பஸ்ஸின் குலுக்கலுக்கேற்ப்ப திடுக்கிட்டு எழுந்தார்கள்.
கணேசன், ரமா தம்பதியரும் எழுந்து குழந்தை வைசாலியைப் பார்த்தால் அவள் தூங்கி எழுந்து கண் விரித்துச் சிரித்தாள். மூன்றே வயதானாலும் இந்த சிரமமான பயணத்தை அவள் சமாளித்த விதம் அவர்களுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. ஆச்சு, அஞ்சு நாள் சுற்றுலாவில் இந்தக் கடைசி கோவிலைப் பார்த்தப்புறம் ராத்திரி ரயிலேற வேண்டியதுதான். ஆனால் ரமாவைப் பொருத்தமட்டில் இது தான் முக்கியக் கோவில்.
வைசாலி சின்னக் குழந்தையாய் இருந்ததிலுருந்து, தொட்டதுக்கெல்லாம் ஜலதோஷம், மூச்சுத் திணறல்.எவ்வளவோ டாக்டர்கள், எத்தனையோ டெஸ்டுகள்- ஓன்றும் பலனில்லை. மூன்று, நாலு நாள் குழந்தை அவஸ்த்தைப் பட்டுத்தான் தீரும். யாரோ சொன்னார்கள் இந்தக் கோவிலுக்குப் போனால் எல்லா வியாதிகளும் தீருமென்று. அதுதான் பிடிவாதமாக பிகு பண்ணிய கணேசனை லீவு போடச்சொல்லி இங்கு வந்து விட்டாள்.
பஸ்ஸை விட்டு இறங்கியவுடன் ஒரு கூட்டம் இவர்களைச் சூழ்ந்து கொண்டது - கைடுகள், வியாபாரிகள் மற்றும் பிச்சைக் காரர்கள். அதில் ஒரு சின்னப் பெண் பல நாள் எண்ணை பார்க்காத பரட்டைத் தலையுடன், கிழிந்த பாவாடையோடு நசுங்கிய அலுமினியத் தட்டை நீட்டியது. இந்த ஐந்து நாட்களில் எத்தனையோ பிச்சை போட்டாயிற்று. போ போ என்று விரட்டியும் விடாப்பிடியாக வந்த அந்தப் பெண், வைசாலி கையில் உள்ள பிஸ்கட் பொட்டலத்தைப் பார்த்தவுடன், இன்னும் கெஞ்ச ஆரம்பித்தது " அம்மா- சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. பசிக்குது" என்று சொல்லி ஆர்வத்தில் வைசாலியின் கையைத்தொட்டது. அதுவரை அந்தப் பிச்சைக் குழந்தையின் அழுக்கான உருவத்தை அருவருப்புடன் பார்த்து வந்த கணேசன், அது வைசாலியைத் தொட்டதும், அருவருப்பு கோபமாக மாறியது. "தொட்டால் பிச்சுப்புடுவேன். போ அந்தண்டை" என்று அவளைப் பிடித்து ஒரு தள்ளு தள்ளினான். தள்ளிய வேகத்தில் அந்தக் குழந்தை கீழே விழுந்து எழுந்து முழங்கை சிராய்ப்பிலுருந்து வந்த லேசான ரத்தக் கசிவைப் பார்த்து மேலும் பலமாக அழ ஆரம்பித்தது. ஓடி வந்த ரமா "ஏங்க இப்படி வெறி பிடிச்ச மாதிரி தள்ளரீங்க, ஏதாவது பெரிய அடிபட்டு ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆச்சுன்னா" என்றாள். கணேசனோ " ஆமாம், அந்த அழுக்குப் பிடிச்சவள் இவளைத்தொடரா. ஏதாவது இன்ஃபெக்ஷன் ஆச்சுன்னா" என்றான்.
ஒருவழியாக விடுவித்துக் கொண்டு கோவிலுக்குப் போனால் நீண்ட வரிசையில் நின்று ஸ்வாமி தரிசனத்துக்க்ப் பின் யாரோ சொன்னார்கள்- அங்குள்ள சாமியார் எல்லா வித உபாதைகளுக்கும் நிவர்த்தி சொல்வாரென்று.
அந்தச் சாமியார் முன் நமஸ்காரம் பண்ணி கண்ணில் நீர் ததும்ப தன் பெண் படும் அவஸ்த்தையை வைசாலி சொன்னவுடன், அவர் சற்றே கண்ணை மூடி சில வினாடிகளுக்கப்புறம் " பித்ருக்கள் தோஷம் நிரைய இருக்கு. எப்போ குல தெய்வம் கோவிலுக்குப் போனேள்" என்று கேட்க , அவள் விழித்தாள். கணேசன் சமாளித்து " ஆபீஸ் பிசியில் எங்க சாமி போறது" என்றான்.
சாமியார் லேசாகச் சிரித்து விட்டு "இருக்கட்டும். ஆனால் கண்டிப்பாகப் பரிகாரம் செய்ய வேண்டும். ஒரு பொம்மனாட்டியைக் கூப்பிட்டு, துணி வாங்கிக் கொடுத்து வயிராரச் சாப்பாடு போடுங்கள். இந்த அம்பாள் மனம் குளிர்ந்து நல்லது செய்வாள்" என்றார். முடிந்தால் இன்றே , இந்த ஸ்தலத்தில் ஏதாவது உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்" என்றார். ரமா கணவனை ஏறெடுத்து ஒரு பார்வை பார்த்தாள்.
ப்ரமை பிடித்த நிலையில் வெளியே வந்து ஏதாவது பெண் குழந்தை கண்ணில் படுமா என்று தேடினால் யாரையும் காணவில்லை. வந்த வழியே ஓடி வந்து அந்தப் பிச்சைக்காரக் குழந்தையைத் தேடினால், அவளையும் காணோம். களைத்துப் போய் அருகிலுள்ள ஹோட்டலில் சாப்பிட்டு வந்தவுடன் பார்த்தால் அந்தச் சாமியார், காலையில் தள்ளி விட்ட பிச்சைக்காரக் குழந்தைக்கு பிஸ்கட் கொடுத்துக் கொண்டிருந்தார்- அதன் முழங்கையில் ஒரு புது ப்ளாஸ்த்ரி தெரிந்தது. "எதுக்கு இப்படி குழந்தையை புண்படுத்தி பாபத்தைச் சம்பாதிக்கறங்களோ தெரியல்ல" என்று புலம்பிக் கொண்டிருந்தார். கணேசன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்- அந்தக் காட்சியாய்ப் பார்க்காமலிருப்பதற்க்காகவா அல்லது ரமாவின் அனல் பார்வையைத் தவிர்ப்பதற்க்கா என்று தெரியவில்லை.

தூரத்தில் உச்சி காலத்துக்காக அடித்த கோவில் மணி அம்பாள் புன்னகைப்பது போலிருந்தது.

My First story published in www.sirukathaigal.com on 10-August-2013

0 comments:

Post a Comment

 
Hit Counter:
hit counter